Friday 1 December 2017

இஞ்சி மருத்துவ பயன்கள்



ஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.  இஞ்சி அதன் மருத்துவக் குணத்திற்காக பண்டையகாலத்திலிருந்தே இந்தியா, சீனா, தூர கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

* இஞ்சி நுரையீரல் சம்பந்தப்பட்ட சளி, இருமல் வியாதிகளை குணப்படுத்துகிறது. 

* இஞ்சி இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால் பெரும்பாலான இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது.

* பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் செரிமான கோளாறு, ருசியின்மை, பசியின்மை, வாந்தி, கிறுகிறுப்பு போன்றவைகள் குணமாக்கி உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

* இஞ்சியில் 1 முதல் 4% வரை வோலடைல் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் இஞ்சியின் மருத்துவக் குணத்திற்கும் வாசனை மற்றும் ருசிக்கும் மூலகாரணமாக உள்ளது. 

* ஜின்ஜிபெரேன், பிசா பொலின் என்று இரண்டு நறுமண பொருட்களும் ஜின்ஜரோல்ஸ்  என்ற காரமான பொருளும் இஞ்சியில் இருப்பதால் வாந்தி வரும் நிலையை தடுக்கிறது. 

* இஞ்சியை பயன்படுத்துவதால் மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் ஆண்மை குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.




இஞ்சியை நோய்கள் போக்க பயன்படுத்த வேண்டிய முறைகள்

* சளியை விரட்டும் இஞ்சி: 
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும்.

* தலைவலி, தலைபாரம் போக்கும் இஞ்சி: 
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

* பித்தம் நீங்கிட இஞ்சி காயகல்பம்: 
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!


* செரிமான கோளாறுகள் நீங்கிட: 
நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 கிராம் இஞ்சிப்பவுடர் உட்கொள்ளவும் (அ) புத்தம் புதிதான இஞ்சித்துண்டு சிறிது எடுத்துக்கொண்டு அதன்மேல் பாறை உப்பு தூவிக்கொண்டு சாப்பாட்டுக்கு முன்பு உட்கொண்டு வர சீரண சக்தியை வலுப்படுத்தும். உணவு நன்றாக செரிமானம் ஆகிவிடும். சுக்கு பவுடர் உடன் திப்பிலி மற்றும் கருமிளகு சேர்த்து உட்கொண்டு வர ஜீரண மண்டல பாதை நன்றாக செயல் பட ஆரம்பிக்கும்.

* பித்தம் போக்கும் இஞ்சி கஷாயம்: 
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

* ஆஸ்துமா, இருமல் நீங்க:
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)

* பிரயாண களைப்பு வராமல் தடுக்க:
சுக்குப்பவுடர் 1 கிராம் பிரயாணம் செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். 

* ஆண்மை குறைவு நீங்க: 
ஆண்களுக்கு கோழி அல்லது ஆட்டு இறைச்சி சூப்பில் அல்லது ஆப்பாயில் முட்டையில் சுக்குப்பொடி சேர்த்துக்கொள்ள ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் பிரச்சனைகள் குணமாகும்.

* இஞ்சி முரப்பா: 
இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தி தயாரிக்கபடுவது இஞ்சி முரப்பா. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முரப்பா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

* மாதவிடாய் கோளாறுகள் நீங்கிட: 
புதிய இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சர்க்கரை இத்துடன் சேர்த்து சாப்பாட்டுக்குப் பின்பு தினசரி 3 வேளை அருந்தி வரவும். மாதவிடாய்வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் குணமாகும்.
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்